Monday, June 6, 2011

சாக்கலேட் பர்பி


தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
கோக்கோ பவுடர் அல்லது சாக்கலேட் பவுடர்- 1 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் - 1/2 கப்
நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 கப்

செய்முறை:

நெய்யை வாணலியில் போட்டு, உருகியதும் அதில் மைதாவை வாசனை வரும் வரை (2 அல்லது 3 நிமிடங்கள்) வறுத்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் பால் பவுடரைச் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையுடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு நல்ல பதம் வந்ததும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டால், அது கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். விரல்களால் எடுத்தால் மிருதுவாக முத்து போல் வர வேண்டும், அத்துடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில், வெதுவெதுப்பான பாலில் கோகோவைக் கலந்து ஊற்றி, மீண்டும் நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். சற்று ஆறிய பின் துண்டுகள் போடவும்.


கோகோவிற்கு பதில், போர்ன்விடா அல்லது ட்ரிங்கிங் சாக்கலேட் சேர்த்தும் செய்யலாம். எது சேர்த்தாலும் வெதுவெதுப்பான பாலிலோ அல்லது தண்ணீரிலோ சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் பின் மாவில் சேர்க்கவும். அப்பொழுதுதான் கட்டியில்லாமல், சுலபமாக மாவுடன் சேரும். கிளறவும் எளிதாக இருக்கும்.

சர்க்கரை அளவு - 1 கப் மைதாவிற்கு, 2 கப்
போர்ன்விடா அளவு - 1 கப் மைதாவிற்கு 1/2 கப்
கோகோ என்றால் - 1 டேபிள்ஸ்பூன் போதும் - அதிகம் சேர்த்தால் சிறு கசப்பிருக்கும்.

பால் பவுடருக்குப் பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்தும் செய்யலாம். பால் பவுடர் அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். இவற்றை சேர்க்காமலும் செய்யலாம்.

இரண்டு கலர் பர்பிக்கு, கோகோ சேர்க்காமல், மைதா பர்பி செய்து, விருப்பமாக எஸ்ஸெனஸ் சிறிது சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி ஆற விடவும்.
பின்னர், மேற்கூறியபடி சாக்கலேட் பர்பி செய்து, ஆற வைத்துள்ள மைதா பர்பியின் மேல் ஊற்றி சமமாகப் பரப்பி, சற்று ஆறிய பின் துண்டுகள் போட்டால், இரண்டு கலரில் இருக்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சாக்கலேட் பர்பி"

Post a Comment