நித்யானந்தா சாமியார்-நடிகை ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சி உண்மையானது என்று டெல்லியில் உள்ள அறிவியல் தடய ஆய்வுக்கூடம் நிரூபித்துள்ளது என்று நித்யானந்தா சாமியாரின் முன்னாள் சீடர் லெனின் தெரிவித்தார்.
நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
லெனின் என்ற நான் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமத்தில் சேர்ந்தபின் எனது பெயர் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நான் 4 வருடங்கள் அவருடன் இருந்தேன். நடிகை ரஞ்சிதா-நித்யானந்தா இருவரும் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ என்னிடம் கிடைத்தபிறகுதான் அவர் தவறானவர் என்று தெரிந்தது. அவர் தன்னை சிவன் என்றும், மகாவிஷ்ணு என்றும் சொல்லிவந்தார். நானும் அவரை நம்பினேன்.
அவருடைய ஆபாச வீடியோ காட்சி என்னிடம் சிக்கிய பிறகு அவர் என்னிடம் போனில் கெஞ்சி வேறு ஏதாவது இருந்தால் தந்து விடு. ஒரு முறை பெங்களூர் வா, என்னை மன்னித்துவிடு என்றார். அதை நான் அப்படியே டேப் செய்து வைத்திருக்கிறேன். (அந்த டேப் என்று கூறி அதை பத்திரிகையாளர் மத்தியில் போட்டு காண்பித்தார்) எனக்கு ரூ.20 கோடிவரை தருவதாக பேரம் பேசினார். அதற்கு நான் மசியவில்லை. இந்து சமயத்தில் இப்படிப்பட்ட போலி சாமியார் இருக்கக்கூடாது என்பதை விரும்புகிறேன்.
ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் இருந்த வீடியோ காட்சியை சி.பி.ஐ. போலீசார் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வுகூடத்தில் பரிசோதித்தனர். அதில் அந்த வீடியோ உண்மை என்றும், அது போலி அல்ல என்றும் அறிக்கை தரப்பட்டுள்ளது. இது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் நித்யானந்தா சாமியார் பெயரில் 5 கம்பெனிகள் உள்ளன. மலேசியாவிலும் கம்பெனி உள்ளது. அனைத்தும் அறக்கட்டளையாக தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து கோடி கோடியாக வருமானம் வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.89 கோடிக்கு வரி செலுத்தாமல் இருக்கிறார். காரணம் அது அறக்கட்டளை. அவருடைய கம்பெனிகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து சாமி சிலைகளை செய்து அதை ஏற்றுமதி செய்து அவற்றை அவருடைய கம்பெனிகளே வாங்கி வியாபாரம் செய்து வருகிறது. இதன் மூலம் ஹவாலா பணம் இந்தியாவிற்கு வருகிறது. மொத்தம் ரூ.500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. 5 தங்க சிம்மாசனங்கள், ஏராளமான தங்க, வைர நகைகள் உள்ளன. அவர் தனது பக்தர்களை மீண்டும் பகடைக்காய்களாக முயற்சி செய்து இருக்கிறார். சமீபத்தில் திருவண்ணாமலையில் அவர் ஆலயப்பிரவேசம் வந்தபோது வந்த கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம்.
வீடியோ உண்மை இல்லை என்றால் நடிகை ரஞ்சிதா இதுவரை ஏன் தலைமறைவாக இருந்தார்? என் மீதும் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணை கற்பழித்ததாகவும், நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நான் என்மீது உள்ள வழக்கை சந்திக்க தயார். பொய்யை கண்டுபிடிக்கும் சோதனைக்கு நான் தயார். ஆனால் நித்யானந்தா தயாரா?. இவ்வாறு லெனின் கூறினார்.
அவருடன் நித்யானந்தாவின் மற்றொரு பக்தர் பிரசன்னகுமார் உடன் இருந்தார். அவரும் நித்யானந்தா சாமியார் போலி சாமியார் என்று தெரிவித்தார்.

0 comments: on "நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கூறியதாவது:-நித்யானந்தா சாமியார்-நடிகை ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சி உண்மை"
Post a Comment