Tuesday, January 18, 2011

பொங்கல் ஸ்பெஷல்: மகத்துவம் நிறைந்த மஞ்சள்!

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். மஞ்சள் கிழங்கில் உள்ள மருத்துவப் பயன்களையும், அதன் மகத்துவத்தையும் பார்ப்போம். 

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.
மூன்றாவது ரகமான விரலி மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.

மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்துத் தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.

மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு. மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்த நீர் சுரப்பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கலப்படமில்லாத மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்தூளில் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்குத் தடவி, பயத்தமாவைத் தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பொங்கல் ஸ்பெஷல்: மகத்துவம் நிறைந்த மஞ்சள்!"

Post a Comment